கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வேன்களில் கடத்திய ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது-தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு


கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வேன்களில் கடத்திய ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது-தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jan 2022 2:28 AM IST (Updated: 6 Jan 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வேன்களில் கடத்திய ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்
கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வேன்களில் கடத்திய ரூ.17 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார்  தேடி வருகிறார்கள். 
ரகசிய தகவல்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி வழியாக வேன்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் போலீசாருடன் பண்ணாரி சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக 2 சரக்கு வேன்கள் வந்தன. சந்தேகத்தின் பேரில் போலீசார் 2 வேன்களையும் தடுத்து நிறுத்தி அதன் டிரைவர்களிடம் வேன்களில் என்ன இருக்கிறது? என்று கேட்டார்கள். அதற்கு இருவருமே முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். 
65 மூட்டைகள்
இதையடுத்து போலீசார் 2 வேன்களையும் சாலை ஓரமாக கொண்டு வந்து நிறுத்த சொன்னார்கள். அப்போது 2-வதாக வந்த வேனின் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் முதலில் வந்த வேனின் டிரைவரை பிடித்துக்கொண்டார்கள். 
அதன்பின்னர் 2 வேன்களிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே 65 மூட்டைகள் இருந்தன. அவைகளை பிரித்து பார்த்தபோது ஒவ்வொரு மூட்டையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து பிடிபட்ட டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
வேன்கள் பறிமுதல்
விசாரணையில், பிடிபட்டவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் (வயது 26), தப்பி ஓடியவர் மைசூருவை சேர்ந்த குமார் என்பதும், இருவரும் 2 வேன்களில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. 
இதையடுத்து போலீசார் செம்புலிங்கத்தை கைது செய்து, கோவையில் புகையிலை பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது. கர்நாடகாவில் இதை அனுப்பியவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 
65 மூட்டை புகையிலை பொருட்களும் 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு சத்தி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் தப்பி ஓடிய குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story