தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
ஆபத்தான குழி (படம்)
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்தப்பகுதி பொதுமக்கள் குழி உள்ள இடத்தில் மரக்கிளையையும், பெரிய கல்லையும் வைத்து உள்ளனர். எனவே ஆபத்தான அந்த குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
ரோட்டில் குப்பைகள்
ஈரோடு முதலி தோட்டம் எல்.வி.ஆர். காலனி அருகில் ரோட்டில் பலர் குப்பைகளை கொட்டிச்சென்று விடுகிறார்கள். இதனால் காற்றில் குப்பைகள் பறக்கிறது. மேலும் இதன் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் குடிமகன்கள் இந்த குப்பைகளில் தீ வைத்து சென்று விடுகிறார்கள். இதனால் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதன் அருகில் மின்சார கம்பம் உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவா, எல்.வி.ஆர்.காலனி, ஈரோடு.
நீச்சல் பயிற்சி அளிக்கவேண்டும்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தற்போது கொரோனா விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் உள்ளார்கள். இவர்கள் பொழுது போக்காக அந்தந்த பகுதியில் உள்ள ஆறு, குளம், குட்டைகளில் குளிக்க செல்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில் நீச்சல் தெரியாமல் பல மாணவ-மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி வாரிய பயிற்சியாளர்களை நியமித்து மாணவ-மாணவிகளுக்கு முறையாக நீச்சல் பயிற்சி அளித்தால் பெரும் பயனாக இருக்கும்.
சொக்கலிங்கம், சென்னிமலை.
ஆபத்தான மின்கம்பம்
ஆப்பக்கூடல் சக்தி நகர் பகுதியில் உயர்மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அந்த கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. யாராவது செடிகளை தெரியாமல் தொட்டால் கூட ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
மல்லிகா, ஆப்பக்கூடல்.
----------------
Related Tags :
Next Story