அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம்; நெல் நாற்று-கரும்புகள் நாசம்


அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசம்; நெல் நாற்று-கரும்புகள் நாசம்
x
தினத்தந்தி 6 Jan 2022 2:44 AM IST (Updated: 6 Jan 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் நெல் நாற்றுகள், கரும்புகள் நாசமாகின.

அந்தியூர்
அந்தியூர் அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் நெல் நாற்றுகள், கரும்புகள் நாசமாகின. 
யானை புகுந்தது
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது வட்டக்காடு மற்றும் கிழங்கு குழி கிராமம். இந்த பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பர்கூர் வனப்பகுதியில் இருந்து யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி வட்டக்காடு, கிழங்கு குழி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வட்டக்காடு பகுதியில் மயில்சாமி என்பவருடைய நெல் வயலுக்குள் யானை புகுந்து நாற்றுகளை மிதித்து நாசம் செய்தது. யானையின் பிளிறல் சத்தம்கேட்டு தூங்கிக்கொண்டு இருந்து விவசாயிகள் எழுந்து ஓடிவந்து பார்த்தார்கள். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானையை அங்கிருந்து விரட்டினார்கள்.
மின்வேலி 
அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற யானை கிழங்குகுழி கிராமத்தில் இருந்த கரும்பு தோட்டங்களுக்குள் புகுந்தது. கரும்புகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. அந்த பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்ட முயன்றார்கள். அப்போது யானை அவர்களை துரத்தியது. அலறி அடித்து அனைவரும் ஓடினார்கள். சிறிது நேரம் கரும்பு தோட்டத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட யானை பின்னர் தானாக பர்கூர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, அடிக்கடி பர்கூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. எனவே யானைகள் வெளியேறும் பகுதியில் சூரிய ஒளி மின்வேலி அமைக்கவேண்டும். அல்லது அகழி வெட்டவேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களை கணக்கிட்டு அதற்கு வனத்துைறயினர் இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்றார்கள்.

Next Story