பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு
பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினா் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு வழங்கினார்கள்.
ஈரோடு
இந்து மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில் அந்த கட்சியினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில் கூறப்பட்டு இருந்ததாவது-
தமிழர் திருநாளான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் விழாக்களை விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகையின்போது பொதுமக்கள் வீர விளையாட்டுகள் நடத்தி பரிசுகள் வழங்குவது பாரம்பரியமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் மட்டும் சேவல் சண்டை உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் முறையாக அனுமதி பெற்றும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் போட்டிகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story