பெங்களூருவில் வார இறுதி ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் - போலீஸ் அதிகாரிகளுக்கு, கமல்பந்த் உத்தரவு
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கமல்பந்த் ஆலோசனை
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துவது, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தவிர்ப்பது, குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன், நேற்று போலீஸ் கமிஷனா் கமல்பந்த் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, கமல்பந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசும், மாநகராட்சியும் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்கள் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
வார இறுதி நாட்களை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். இதற்காக வியாபாரிகள் உள்ளிட்ட யாருக்கும் தனியாக பாஸ் எதுவும் வழங்கப்படாது. நகரில் உள்ள முக்கிய சாலைகள், சர்க்கிள்கள் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். போக்குவரத்து போலீசாருடன், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து பணியாற்றி ஊரடங்கை வெற்றி அடைய செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் போலீசாருக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story