பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான பெண் குறித்து திடுக்கிடும் தகவல்கள்


பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான பெண் குறித்து திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 6 Jan 2022 3:03 AM IST (Updated: 6 Jan 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட தீப்தி மர்லா குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

பயங்கரவாத அமைப்பு

  சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பி வைப்பதாக, தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு உல்லால் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. இதனப்பாவின் பேரன், அவரது மனைவிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து இருந்தது.

  இதையடுத்து கடந்த 3-ந் தேதி டெல்லியில் இருந்து வந்து இருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் உல்லாலுக்கு வந்தனர். அவர்கள் உல்லால் அருகே மாஸ்திகட்டே பகுதியில் வசித்த வரும் தீப்தி மர்லாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை டெல்லிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலாக மாறியது

  இந்த நிலையில் தீப்தி மர்லா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் தீப்தி மர்லா. டாக்டருக்கு படிப்பதற்காக இவர் மங்களூருவுக்கு வந்து ஒரு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போதுதான் இவருக்கும், இதனப்பாவின் பேரன் அனாஸ் அப்துல் ரகுமான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர் இருவரும் சேர்ந்து பி.எம்.பாஷா என்பவரின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்துள்ளனர். இவர்களுக்கு, இவர்களுடைய உறவினர் அமர் அப்துல் ரகுமான் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

15 போலி கணக்குகள்

  இவர்கள் மொத்தமாக சமூக வலைத்தளங்களில் 15 போலி கணக்குகளை தொடங்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்துள்ளனர். இதுதவிர ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகளால் ஐ.எஸ்.ஐ.எஸ். பங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக கைதான மாதேஷ் பெருமாள் என்பவருடன், தீப்தி மர்லாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story