காங்கிரசின் பாதயாத்திரையை தடுக்க பா.ஜனதா அரசு சதி; சித்தராமையா குற்றச்சாட்டு
மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரையை தடுக்க பா.ஜனதா அரசு சதி செய்துள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நீருக்காக நடை
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாள் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. நாங்கள் பாதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த பாதயாத்திரையின் பெயர் ‘நீருக்காக நடை’ (வாக் பார் வாட்டர்) என்பதாகும். வருகிற 9-ந் தேதி மேகதாதுவில் தொடங்கி 19-ந் தேதி பெங்களூருவில் இந்த பாதயாத்திரை முடிவடைகிறது.
நாங்களும் நீண்ட காலம் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளோம். அரசின் விதிமுறைகளை மீறுவது, சட்டத்தை கையில் எடுத்து கொள்வது எங்களின் நோக்கம் இல்லை. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது என்று அனைத்து தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதயாத்திரை நடத்துகிறோம்.
காவிரி நீர் கிடைக்கவில்லை
காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தக்கூடாது என்று இந்த பா.ஜனதா அரசு சதி செய்துள்ளது. கர்நாடகத்தில் இருந்து 25 எம்.பி.க்கள் பா.ஜனதா சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இதில் எந்த எம்.பி.யும் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை அமல்படுத்துமாறு கடிதம் கொடுக்கவில்லை. மேகதாது, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட திட்டங்களில் மத்திய அரசு கர்நாடக மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகிறது.
மேகதாது திட்டத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அனுமதிக்காக மத்திய அரசிடம் தாக்கல் செய்தோம். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ஒருமுறை மட்டும் மேகதாது குறித்து பேசினார். அதன் பிறகு பா.ஜனதாவினர் எங்கும் மேகதாது குறித்து பேசவில்லை. பெங்களூருவில் தற்போதும் 30 சதவீதம் பேருக்கு காவிரிநீர் கிடைக்கவில்லை.
அண்ணாமலை போராட்டம்
மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். இதற்கு கர்நாடக பா.ஜனதாவின் ஆதரவும் கிடைத்தது. கொரோனா 3-வது அலை ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் உண்டாகும் என்று நிபுணர்கள் கூறினர். ஆனால் இந்த அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கும்போது, இதை தடுக்க அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. நாங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை நடத்துவோம். இதன் மூலம் கர்நாடக பா.ஜனதா அரசின் சதியை மக்களுக்கு தெரிவிப்போம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story