அனைத்து வசதிகளுடன் புதிய பெங்களூருவை உருவாக்க வரைபடம் தயாராகிறது - பசவராஜ் பொம்மை தகவல்


அனைத்து வசதிகளுடன் புதிய பெங்களூருவை உருவாக்க வரைபடம் தயாராகிறது - பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2022 3:19 AM IST (Updated: 6 Jan 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பெங்களூருவை உருவாக்க வரைபடம் தயாரிக்கப்படுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

அடிப்படை வசதிகள்

  பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

  அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பெங்களூருவை உருவாக்க ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யும். பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் நகரில் திட்டமிட்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த திட்டம் அமல்படுத்த வேண்டியுள்ளது. நகரின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான அடிப்படை வசதிகளை வழங்க நாங்கள் ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து வருகிறோம்.

தொலைநோக்கு பார்வை

  நாங்கள் 4, 5 திட்டங்களை தொடங்கியுள்ளோம். இது பெங்களூரு தொலைநோக்கு பார்வை திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த தொலைநோக்கு திட்டம் கடந்த எடியூரப்பா ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. திட்ட பணிகளை விரைவாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அமையும் நிறுவனம் பா.ஜனதா எம்.பி. சித்தேஸ்வருக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

  இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் பெங்களூருவின் பங்கு 40 சதவீதம் ஆகும். அதனால் நாட்டின் பொருளாதார வாகனத்தின் என்ஜினீராக பெங்களூரு திகழ்கிறது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story