கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி காங்கிரசின் பாதயாத்திரை நடைபெறும் - டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி திட்டமிட்டபடி காங்கிரசின் பாதயாத்திரை நடைபெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஊரடங்கை திணிப்பது சரியா?
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது கர்நாடக அரசின் ஊரடங்கு அல்ல, பா.ஜனதா ஊரடங்கு. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அதனால் அக்கட்சியின் நலன் கருதி இந்த ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. மாநிலத்தில் 6 கோடி பேர் உள்ளனர்.
வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என்பதை சொன்னால், நாங்கள் அவர்களுக்கு தைரியம் சொல்வோம். போராட்டம் நடத்த வேண்டாம் என்று அரசு கூறுகிறது. நாங்கள் நீருக்காக நடக்கிறோம். மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காங்கிரசின் பாதயாத்திரை நடைபெறும். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்கனவே கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது மீண்டும் ஊரடங்கை திணிப்பது சரியா?.
நீருக்காக நடை
கட்டுப்பாடுகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கொரோனா முதல் அலையின்போது, அவர் நீச்சல் குளத்தில் நீந்தினாரே. அது விதிமீறல் இல்லையா?. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி ஸ்ரீராமுலு, திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்ற எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?.
வருகிற 9-ந் தேதி நாங்கள் திட்டமிட்டபடி பாதயாத்திரையை தொடங்குவோம். நாங்கள் விதிமுறைகளை பின்பற்றி பாதயாத்திரை மேற்கொள்வோம். 100 டாக்டர்களை உடன் அழைத்து செல்கிறோம். அரசுக்கு மக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம் அல்ல. மக்களின் உயிரை எடுப்பது தான் முக்கியம். நாங்கள் நடத்துவது பாதயாத்திரை அல்ல, நீருக்காக நடைபெறும் நடை. பாதயாத்திரைக்கு பதிலாக ‘நீருக்காக நடை’ என்று பெயரை மாற்றிக்கொள்கிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story