வார இறுதி நாள் ஊரடங்கின்போது பெங்களூருவில் பஸ்கள் ஓடாது - கர்நாடக அரசு அறிவிப்பு
வார இறுதி நாள் ஊரடங்கின்போது பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடாது என்றும், ஆனால் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு:
10 சதவீத பஸ்கள்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் மீண்டும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதன்காரணமாக மாநில அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 8 மணி முதல் வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் எப்போதும் போல் செயல்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்யவும் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
பி.எம்.டி.சி பஸ்கள் ஓடாது
மேலும் இன்று (வியாழக் கிழமை) முதல் பெங்களூருவில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர புதிய கட்டுப்பாடுகளையும் அரசு விதித்திருக்கிறது. அதாவது தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகளில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிப்பது, திருமண நிகழ்ச்சிகளில் உள் அரங்குகளில் 100 பேரும், திறந்த வெளியில் 200 பேரையும் அனுமதிப்பது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதுதவிர வார இறுதி நாள் ஊரடங்கில் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களும், மெட்ரோ ரெயில்களும் அரசு வழிகாட்டுதல்படி இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
பெங்களூருவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் அதாவது 10 சதவீத பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே பஸ்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கான பஸ்களில் பயணிப்போர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பி.எம்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் விதிமுறையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முகக்கவசம் அணிய வேண்டும்
ரெயில்கள், விமானங்களில் வந்தவர்கள் அதற்கான டிக்கெட்டை காட்டி பயணிக்கலாம். பஸ்களில் நின்று பயணிக்க அனுமதி இல்லை. தேர்வுக்கு ஆஜராகும் மாணவர்கள் அதற்கான சான்றிதழை காட்டி பயணிக்கலாம். காய்ச்சல் மற்றும் பிற நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பஸ்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பஸ்களில் பயணிப்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகள் பஸ்சில் ஏற்றப்பட மாட்டார்கள்.
இவ்வாறு பி.எம்.டி.சி. நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் எப்போதும் போல் இயக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத் கூறியுள்ளார். ஆனால் பயணிகளின் வருகையை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
மெட்ரோ ரெயில்
வார இறுதி நாள் ஊரடங்கில் மெட்ரோ ரெயில்களின் போக்குவரத்து குறித்து பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் தற்போது மெட்ரோ ரெயில்களின் சேவை தினமும் காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை வழங்கப்படுகிறது. இந்த சேவையில் திங்கட்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை எந்த மாற்றமும் இல்லை. வார இறுதி நாள் ஊரடங்கிலும் ரெயில்கள் ஓடும். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பதில் 10 மணிக்கு கடைசி ரெயில், முனைய ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேலும் காலை 5 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 9 மணிக்கு நிறைவு செய்யப்படும். ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் என்று இருந்த சேவையில் 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் என்று மாற்றப்பட்டு உள்ளது. மேலும் மெட்ரோ ரெயில்களில் வார இறுதி நாள் ஊரடங்கின்போது 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பஸ்கள், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருப்பது அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story