‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 6 Jan 2022 1:32 PM IST (Updated: 6 Jan 2022 1:32 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்சார ‘சுவிட்ச் பாக்ஸ்’ உயர்த்தப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கருங்குழியை அடுத்த கிணார் கிராமத்தில் பள்ளிக்கூடம் அருகே மின்விளக்கு கம்பத்தில் ‘சுவிட்ச் பாக்ஸ்’ மாணவர்களின் கை எட்டும் தூரத்தில், ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின்கம்பத்தில் உள்ள ‘சுவிட்ச் பாக்ஸ்’ மின்சார கம்பத்தில் உயர்த்தி வைக்கப்பட்டு உள்ளது.

மின்வாரியம் விறுவிறு நடவடிக்கை



சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு 9-வது மெயின் ரோட்டில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்தநிலையில் அபாயகரமாக இருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரேன் உதவியுடன் மின்சார டிரான்ஸ்பார்மர் நேர் நிமித்தப்பட்டு உள்ளது. அச்சம் நீங்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் மனதார நன்றியை தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடை அடைப்புக்கு தீர்வு

சென்னை கொரட்டூர் வடக்கு சீனிவாசபுரம் முதல் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் சிரமம் குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து கழிவுநீர் அடைப்பு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

தெரு பெயர் மறைப்பு

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் நேரு பள்ளி அருகில் மேட்டு தெரு பெயர் பலகை முன்பு மண் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பெயர் பலகை தெளிவாக தெரிவது இல்லை. இப்பகுதிக்கு வரும் டெலிவரி நிறுவன ஊழியர்கள் முகவரி தெரியாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே பெயர் பலகையை ஆக்கிரமித்துள்ள மணலை அகற்ற வேண்டும்.

-ஜெகன், திருவொற்றியூர்.

பள்ளி அருகே வேகத்தடை வேண்டும்



சென்னை புழல் கேம்ப் பகுதியில் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் புழல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்லக் கூடிய பகுதி ஆகும். ஆனால் இந்த பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

-மாணவர்கள், பெற்றோர்- ஆசிரியர்கள்.

இருள் சூழ்ந்த தெரு

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை தங்கச்சாலை தெருவில் மின்விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால் இப்பகுதி இரவு 7 மணியை கடந்ததும் இருள் சூழ்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை உள்ளது. இருள் சூழ்ந்துள்ள இப்பகுதிக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும்?

-பரணி அமுதா முருகேசன், திருவள்ளூர்.

விபத்துக்கு அச்சாரம்



சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் சிக்னல் அருகே உள்ள சாலையில் கான்கிரீட் பில்லர் வெளியே தெரிகிறது. இது விபத்துக்கு அச்சாரமிடுவது போல் அமைந்துள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்திருக்கும் இந்த பில்லர் கல்லை அகற்றிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

- எல்லை முத்தம்மன் கோவில் தெரு குடியிருப்போர் பொது நலச்சங்கம்.

கழிவுநீரால் அவதி

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வி.புதூர் நாயுடு தெருவில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கியிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவும் சூழலும் உருவாகிறது. இக்கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

- கிராம மக்கள்.

இங்கு எப்படி அமருவது?



சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி. பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை இருக்கைகள் சரிந்து கிடக்கிறது. இதனால் வயதான பயணிகள், உடல்நிலை சரியில்லாத பயணிகள் கால்கடுக்க நிற்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் அமரும் இருக்கையை சீரமைத்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

-இவாஞ்சிலின், வேளச்சேரி.

செயல்படாத எரிவாயு தகன மேடை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளை பகுதியில் இயங்கி வந்த எரிவாயு தகன மேடை கடந்த 8 மாத காலமாக செயல்பாட்டில் இல்லை. இதனால் கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்ட பல கி.மீ. தாண்டி குரோம்பேட்டை மற்றும் புழுதிவாக்கம் தகன மேடைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ள நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே கீழ்க்கட்டளை தகன மேடை மீண்டும் செயல்படு வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள்.

Next Story