வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள 48கிராம பஞ்சாயத்துகளில் உள்ள வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க, வருகிற 20 ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள 48கிராம பஞ்சாயத்துகளில் உள்ள வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க, வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழில் முனைவோர்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 48 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வாகி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டம் பெற்ற 21-40 வயதுக்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் சிறந்த கணினி புலமை உள்ள பட்டதாரிகள், 4 பேர் அரசு மானியத்துடன் வேளாண்மை சார்ந்த புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம், வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது அக்ரி கிளினிக் அமைக்கவும் விண்ணப்பிக்கலாம். வரப்பெறும் விண்ணப்பங்களில் மாவட்ட கலெக்டர், வேளாண்மை இணை இயக்குனர் கொண்ட தேர்வு குழு மூலம் தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், வங்கி கணக்கு நகல், வங்கியில் கடன் உதவி பெற்று திட்டம் தொடங்குபவர் எனில், அதற்குரிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பங்கள் மற்றும் திட்ட அறிக்கையை வருகிற 20-ந் தேதிக்குள் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை, குறைந்தபட்சம் ரூ.2 லட்சமும், அதற்கு மேலும் சமர்ப்பிக்கலாம். அரசு நிதியுதவி ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தொலைபேசி எண்: 0461 2340678 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story