நகை மொத்த வியாபாரியிடம் ரூ.25 லட்சம் தங்க நகைகளை வாங்கி மோசடி


நகை மொத்த வியாபாரியிடம் ரூ.25 லட்சம் தங்க நகைகளை வாங்கி மோசடி
x
தினத்தந்தி 6 Jan 2022 7:35 PM IST (Updated: 6 Jan 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

நகை மொத்த வியாபாரிடம் ரூ.25 லட்சம் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை மொத்த வியாபாரம்

சென்னை வடபழனி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரசாத் பஞ்சாலி (வயது 37). இவர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, ஈ.வெ.ரா. தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். மேலும் இவர், தங்க நகை மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.

இவருக்கு அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த ஜித்துராஜ் (24) என்பவர் அறிமுகம் ஆனார். இவர், அதே பகுதியில் சிறிய நகை கடை நடத்தி வந்தார். பிரசாத் பஞ்சாலியிடம் சிறிது, சிறிதாக நகைகளை வாங்கி தனது கடையில் விற்பனை செய்து, அதற்கான பணத்தையும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ரூ.25 லட்சம் நகை

இந்தநிலையில் புத்தாண்டு அன்று தனது கடையில் அதிக வியாபாரம் நடைபெறும் என்பதால் கூடுதல் நகை தேவைப்படுவதாக கூறிய ஜித்துராஜ், பிரசாத் பஞ்சாலியிடம் இருந்து 477 கிராம் தங்க நகைகளை மொத்தமாக வாங்கி சென்றார். ஆனால் அதற்கான தொகை ரூ.25 லட்சத்தை இதுவரை தராமல் இருந்து வந்தார்.

இதனால் பிரசாத் பஞ்சாலி, ஜித்துராஜின் கடைக்கு சென்று பார்த்தபோது கடை மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, ஜித்துராஜ் கடையை காலி செய்துவிட்டு பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார்.

அதன்பிறகுதான், ஜித்துராஜ் தன்னிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி மோசடி செய்ததை பிரசாத் பஞ்சாலி அறிந்தார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார், தலைமறைவான ஜித்துராஜை அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடி வருகின்றனர்.


Next Story