கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடைகளுக்கு ‘சீல்’. கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய பஸ் நிலையம், தேரடி வீதி, ஜோதி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமாருடன், கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகக்கவசம் அணியாமல் இருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முகக்கவசம் வழங்கினர். மேலும் சிலருக்கு அவர்கள் முகக்கவசம் அணிவித்தனர்.
அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு செய்து, முகக்கவசம் அணியவில்லை என்றால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-
கடைகளுக்கு ‘சீல்’
கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. கடந்த வாரத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு என்று இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்னும் சிலர் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும்.
கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கு மேல் முதல் தவணையும், 67 சதவீதத்திற்கு மேல் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளார்கள்.
15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 72 சதவீதம் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். மீதமுள்ள 28 சதவீதம் ஓரிரு நாட்களில் முழுமையாக செலுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
----
Related Tags :
Next Story