அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை பதிவு


அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை பதிவு
x
தினத்தந்தி 6 Jan 2022 8:22 PM IST (Updated: 6 Jan 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை பதிவு

ஊட்டி

உறைபனி தாக்கம் அதிகரிப்பால் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை பதிவானது. 

அவலாஞ்சியில் உறைபனி

தென்மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று நீலகிரி மாவட்டம் ஊட்டி அழைக்கப்படுகிறது. இங்கு இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். 

ஊட்டியில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியது. நகர்ப்பகுதியை விட சுற்றுப்புற பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊட்டி அருகே அடர்ந்த வனப்பகுதியான அவலாஞ்சியில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளது.

மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை

அவலாஞ்சி அணை மற்றும் அதனை ஒட்டி பசுமையான புல்வெளிகள் மீது நேற்று அதிகாலை உறைபனி படர்ந்து இருந்தது. பின்னர் காலை 7.30 மணிக்கு மேல் சூரிய ஒளி பட்டதும், புல்வெளிகள் மற்றும் அணையில் படர்ந்த  உறைபனி ஆவியானது. 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இங்கு மைனஸ் 1 டிகிரி வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக 10 டிகிரி பதிவாகி இருந்தது. பனிக்காலம் இன்றி மற்ற காலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாவது வழக்கம். 

ஊட்டியில் தாக்கம் குறைந்தது

அவலாஞ்சியில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணி கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு ஒரே நாளில் 90 செ.மீ. மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் தற்போது சோதனைச் சாவடி, நர்சரி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  

நீலகிரியில் அதிக மழைப்பொழிவு பகுதியாகவும், அதிக உறைபனி தாக்கம் உள்ள இடமாகவும் அவலாஞ்சி திகழ்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று உறைபனி தாக்கம் சற்று குறைவாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரியும் அதிகபட்சமாக 19 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவானது.


Next Story