நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 495 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 495 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 Jan 2022 8:28 PM IST (Updated: 6 Jan 2022 8:28 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 495 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக 495 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், நெல்லியாளம், கூடலூர் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 4 நகராட்சிகளில் 208 வாக்குச்சாவடிகள், 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிரித்து கொடுக்கப்பட்டது

நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஊட்டியில் கேரளா கிளப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டின் படி நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக எந்திரங்கள் பிரித்து கொடுக்கப்பட்டது. 

இதனை பெற்று கொண்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது உள்ளாட்சிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் பெட்டி எண், வாக்குப் பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் எண்ணை சரிபார்த்து அடுக்கி வைத்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:- 

495 எந்திரங்கள் ஒதுக்கீடு

நீலகிரியில் நகராட்சிகள், பேரூராட்சிகள் என 15 உள்ளாட்சி அமைப்புகளில் 409 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 495 வாக்குப்பதிவு எந்திரங்கள், 495 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது. 

இந்த எந்திரங்களை பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் தனியாக பிரித்து கேரளா கிளப்பில் வைத்து உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story