நகை அடகு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி


நகை அடகு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 Jan 2022 9:47 PM IST (Updated: 6 Jan 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் தனியார் நகை அடகு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி செய்ததாக மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் தனியார் நகை அடகு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 16 லட்சம் மோசடி செய்ததாக மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தனியார் அடகு நிறுவனம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தனியார் நகை அடகு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருக்குவளை அருகே மாவூரை சேர்ந்த சத்தியபிரகாஷ் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். 
மேலும் இந்த நிறுவனத்தில் வேளாங்கண்ணி கிழக்கு தெருவை சேர்ந்த ஐஸ்வர்யா, செபாஸ்டியன் நகரை சேர்ந்த ராஜ்குமார், திருப்பூண்டி அக்ரஹாரத்தெருவை சேர்ந்த சங்கீதா ஆகியோர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு(2021) நவம்பர் மாதம் 24-ந் தேதி நகை அடகு நிறுவனத்தில் தணிக்கை நடந்தது. அப்போது பாதுகாப்பு பெட்டக அறையில் கவரிங் நகைகள் இருந்துள்ளன. மேலும் தங்க நகைகளின் எடையும் குறைந்துள்ளது. 
இதுகுறித்து தணிக்கை அதிகாரிகள், திருச்சி மண்டல மேலாளர் ஜூலியஸ் ஜோபர்ட் அருணுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர், நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் கொடுத்தார். 
மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த புகார் மனுவை நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிய போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 
விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கிளை மேலாளர் சத்தியபிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா ஆகிய 4 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பெயரில் போலியாக 33 கணக்குகள் தொடங்கி கவரிங் நகைகளை ரூ.42 லட்சத்து 24 ஆயிரத்து 300-க்கு அடகு வைத்தும், நகையின் எடையை உயர்த்தியும், பாதுகாப்பு அறையில் பணப்பெட்டியில் இருந்த ரூ.15 லட்சத்து 76 ஆயிரத்து 65-ஐ முறைகேடாக பயன்படுத்தியதும் என ரூ.1 கோடியே 16 லட்சத்து 38 ஆயிரத்து 80 ேமாசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. 
இதையடுத்து தனியார் நகை அடகு நிறுவன மேலாளர் சத்தியபிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், சங்கீதா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைான அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story