திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு


திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Jan 2022 9:54 PM IST (Updated: 6 Jan 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் புறப்பட்ட தெற்கு ரெயில்வே பொது மேலாளர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருவள்ளூர் ரெயில் நிலையம்

சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று சென்னையிலிருந்து ரேணிகுண்டா வரை உள்ள ரெயில் நிலையங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக அவர், சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார். முதலில் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்திற்கு வந்து பார்வையிட்ட அவர், அங்கிருந்த நடைமேடை, கழிவறை, சிக்னல் ரூம், பயணிகள் ஓய்வு அறை, நிலைய மேலாளர் அறை, ரெயில் நிலைய வளாகத்தில் படுக்கை வசதிகள், கழிவறை வசதிகளுடன் கூடிய பெண்கள் ஓய்வெடுக்கும் அறை போன்ற பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர், திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் கூடியிருந்த ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பயணிகள் கோரிக்கை

அப்போது திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான ரெயில் பயணிகள் ரெயில்வே பொது மேலாளரிடம் மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதி செய்து தரவேண்டும், பயணிகளுக்கு ஏதுவாக சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வைக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் மேற்கூரை அமைக்க வேண்டும், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர ஏதுவாக சாய்வு தளம் அமைத்து தர வேண்டும், சுரங்கப் பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர் வெளியேற்ற வடிகால்வாய் வசதி செய்து தரப்படவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

பாராட்டு சான்றிதழ்

திருவள்ளூர் வரதராஜ நகர் பகுதியில் பொதுமக்கள் வெளி பகுதிகளுக்குச் சென்று வர ஏதுவாக ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

அதை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர், திருவள்ளூர் ரெயில்வே நிலைய த்தில் சிறப்பாக பணிபுரிந்த ரெயில்வே ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அவருடன் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பொறியாளர் பிரபுல்லா வர்மா, தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பிரேந்திரகுமார் மற்றும் திரளான ரெயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ரெயில் மூலம் திருவாலங்காடு, அரக்கோணம் மற்றும் ரேணிகுண்டா ரெயில் நிலையத்துக்கு ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.


Next Story