வியாபாரி, தொழில் அதிபர் வீடுகளில் 26 பவுன் நகைகள் திருட்டு


வியாபாரி, தொழில் அதிபர் வீடுகளில்  26 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 6 Jan 2022 4:28 PM GMT (Updated: 2022-01-06T21:58:30+05:30)

ஒட்டன்சத்திரம், பழனியில் வியாபாரி மற்றும் தொழில் அதிபா் வீடுகளில் 26 பவுன் நகைகள் திருடப்பட்ட துணிகர சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒட்டன்சத்திரம்:

வியாபாரி வீட்டில் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கமிஷன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். 

இந்தநிலையில் நேற்று அதிகாலை முத்துசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் முத்துசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் பதிவான கைரேககளை பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துசாமி வீட்டில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 தொழில் அதிபர்

இதேபோல் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் ( 50). அவருடைய மனைவி மணிமேகலை. முருகேசன் ரியல் எஸ்டேட் மற்றும் பழைய லாரி, வேன் ஆகியவற்றை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகேசன், தொழில் விஷயமாக கேரளாவுக்கு சென்றார். அவரது மனைவி மணிமேகலை, வடமதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று அவரது மனைவி வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

 போலீசார் விசாரணை

 இதுகுறித்து அவர், பழனி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

 மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஒட்டன்சத்திரம், பழனியில் வியாபாரி மற்றும் தொழில் அதிபர் வீடுகளில் 26 பவுன் நகைகள் திருடப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story