விழுப்புரம் அருகே ஒரே கிராமத்தில் 3 கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
விழுப்புரம் அருகே ஒரே கிராமத்தில் 3 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வி.கொளத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி, ஓம்சக்தி, கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த கோவில்களில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில்களை பூட்டிவிட்டு அதன் பூசாரி, வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 3 கோவில்களின் கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கும், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நகை, பணம் கொள்ளை
இதையடுத்து கோவில் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்து அந்த 3 கோவில்களுக்குள்ளும் சென்று பார்த்தனர். அப்போது 3 கோவில்களிலும் இருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது.
மேலும் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சாமிகள் மற்றும் முருகப்பெருமான் சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தலா ஒரு கிராம் பொட்டு தாலியும், அதேபோல் கெங்கையம்மன், ஓம்சக்தி ஆகிய சாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தலா ஒரு கிராம் பொட்டு தாலி என 5 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதனிடையே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கோவில்களில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
3 கோவில்களின் உண்டியலிலும் ரூ.3 ஆயிரம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் மற்றும் சாமி சிலைகளின் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story