நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் டி.மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வளவனூர், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்) ஆகியவற்றை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.
இதில் நல்ல நிலையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 1,150-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 550-ம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பயிற்சிக்காக 15 கட்டுப்பாட்டு கருவிகள், 15 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றை தவிர மீதமுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 348 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 421 கட்டுப்பாட்டு கருவிகள்,
421 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றை முதல் வரிசை முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியானது நேற்று விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story