வீடு, வீடாக சென்று அதிகாரிகள் விசாரணை
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நிலக்கோட்டை:
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 வகையான பொருட்கள், அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிவஞானபுரம் கிராமத்தில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் 15 முதல் 17 பொருட்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரேஷன்கடைக்கு சென்று பொதுமக்கள் கேட்டபோது, விற்பனையாளர் சரிவர பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக முறைகேடு தொடர்பாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் முதல்-அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வீடியோவில் புகாரை பதிவு செய்து அனுப்பினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதன் எதிரொலியாக, கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசி செல்வி, திண்டுக்கல் மாவட்ட இணைப்பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) காந்திநாதன், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குணவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் திருமாவளவன், நிலக்கோட்டை கூட்டுறவு சார்பதிவாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று சிவஞானபுரத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள், ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவித்த நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதில் வழங்கப்படாத பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story