நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய தரமான கோழிகளை தேர்வு செய்ய வேண்டும்


நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய தரமான கோழிகளை தேர்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2022 10:41 PM IST (Updated: 6 Jan 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய தரமான கோழி இனங்களை தேர்வு செய்ய வேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சபாபதி கூறினார்.

நீடாமங்கலம்:-

நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய தரமான கோழி இனங்களை தேர்வு செய்ய வேண்டும் என வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி சபாபதி கூறினார். 

கோழி வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மானங்காத்தான் கோட்டகம் கிராமத்தில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் லாபகரமான புறக்கடைகோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ‘பெண்கள், முதியவர்கள் எளிதாக சம்பாதிக்க சிறந்த வழி புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பதே ஆகும்’ என்றார்.   அரசு கால்நடை டாக்டர் மகேந்திரன் பேசுகையில், ‘நாட்டுக்கோழி வளர்ப்பில் மிக முக்கியமானது தடுப்பூசி அட்டவணையை சரியாக பின்பற்றி நோய் பரவலை தடுப்பது மற்றும் சரியான உணவூட்டம் அளிப்பது’ என்றார். 

கிலோ ரூ.300-க்கு விற்பனை

பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை டாக்டர் சபாபதி கூறியதாவது:- பெருவெடை மற்றும் சிறுவெடை வகை கோழிகள் ஒரிஜினல் நாட்டுக்கோழிகளாக கருதப்பட்டு கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. இக்கோழிகள் வளர 6 மாதம் வரை ஆகும். 
நாட்டுக்கோழிகள் 90 நாளில் இருந்து 110 நாட்களில் சந்தைப்படுத்த தயாராகிவிடும். பொருளாதார ரீதியில் நாட்டுக்கோழி முட்டைகளை உற்பத்தி செய்ய தரமான கோழி இனங்களை தேர்வு செய்ய வேண்டும். கிராமப்பிரியா, கைராலி மற்றும் நிக்கோபாரி வகை கோழிகள் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் ஆண்டிற்கு 180-ல் இருந்து 200 முட்டைகள் வரை இடும் திறன் படைத்தவை. 

முட்டை இடும் திறன்

மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தனுவாஸ் அசீல் 90 நாட்களில் இறைச்சிக்கு தயாராகி விடும். 6 மாதத்திற்கு மேல் வளர்த்தால் ஆண்டிற்கு 180 முட்டைகள் வரை இடும் திறன் படைத்தவை. மேலும் தனுவாஸ் அசீல் கோழிகள் தந்தூரி சிக்கன் செய்வதற்கு மிகச் சிறந்தவை. 
இவ்வாறு அவர் கூறினார். 
இதில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி பெரியார் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விவசாயி தெய்வமணி செய்திருந்தார்.

Next Story