1319 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 1,319 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
திருப்பூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 1,319 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
திருப்பூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 15 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து முதல் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று காலை திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி நல்லூர் மண்டல அலுவலகத்தில் 2 ஆயிரத்து 233 கட்டுப்பாட்டு கருவிகள், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 1,330 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2,118 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
1319 வாக்குச்சாவடிகள்
இந்தநிலையில் நேற்று காலை நல்லூர் மண்டல அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்பு திறக்கப்பட்டது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இணையவழி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சியில் 776 வாக்குச்சாவடிகள் உள்ளன. தாராபுரம் நகராட்சிக்கு 61 வாக்குச்சாவடிகள், காங்கேயத்தில் 38, பல்லடத்தில் 40, திருமுருகன்பூண்டியில் 35, உடுமலையில் 64, வெள்ளகோவிலில் 42 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதுதவிர 15 பேரூராட்சிகளுக்கும் சேர்த்து 263 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,319 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இந்த வாக்குச்சாவடிகளுக்கு தலா 1 வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரம், இதுதவிர 20 சதவீதம் ரிசர்வ் கருவிகள் உள்பட மொத்தம் 1,592 வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் 1,592 கட்டுப்பாட்டு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அந்தந்த மையங்களில் அவைகள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரம், உதவி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், செயல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story