கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி 9ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்


கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி  9ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2022 11:09 PM IST (Updated: 6 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி வருகிற 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மங்கலம்
கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி  வருகிற  9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டமைப்பு கூட்டம் 
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு கூட்டம் நேற்று மங்கலம் பகுதியில் உள்ள அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பல்லடம் சங்க தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சோமனூர், பல்லடம், அவினாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூர், 63வேலம்பாளையம், தெக்கலூர், மங்கலம், கண்ணம்பாளையம் ஆகிய 9 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசுகையில் “  7 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. 
கடந்த 24-11-2021-ந்தேதி கோவையில் நடந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23சதவீதமும் மற்ற ரகங்களுக்கு 20சதவீதமும் என  ஒப்பந்தமானது. ஆனால் இதுவரை  கூலிஉயர்வு வழங்கப்படவில்லை. 
வேலை நிறுத்தம் 
அதன்படி அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க மறுத்து வரும் நிலையில் வருகிற 9-ந்தேதி காலை 6 மணிமுதல் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த  2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால்  10லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படும் நிலையில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 இந்த  போராட்டத்திற்கு விசைத்தறியாளர்கள் மற்றும் நவீன விசைத்தறியாளர்கள், அச்சு பிணைக்கும் துறையினர், விசைத்தறிகளுக்கு பாவு மற்றும் நூல் கொண்டு செல்லும் வேன், ஆட்டோ போன்றவற்றின் உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் ஆதரவு அளிக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story