பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சிதம்பரத்தில் பரபரப்பு


பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சிதம்பரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:09 PM IST (Updated: 6 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக கூறி சிதம்பரம் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம், 

கணக்கெடுப்பு

சிதம்பரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால் பூவாலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து, சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சேதமடைந்த வயல்களை வேளாண் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தினர். மேலும் மத்திய குழுவினரும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து சென்றனர். அப்போது அதிகாரிகள் பூவாலை கிராம மேற்கு பகுதியில் கணக்கெடுப்பு நடத்தியதாகவும், கிழக்கு பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தாமலும் சென்றதாக கூறி அக்கிராம விவசாயிகள் வேளாண் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயிகள் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக கூறி சிதம்பரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டதோடு, நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, கணக்கு எடுக்காத விளை நிலங்களை மீண்டும் கணக்கு எடுத்து அதற்கான நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக பூவாலை கிராம விவசாயிகள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story