ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 27 மாடுகளை ஏற்றி சென்ற சரக்கு லாரி கடத்தல் -ஓசூர் அருகே 13 மாடுகளுடன் லாரியை போலீசார் மீட்டனர்
கந்திகுப்பம் அருகே ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 27 மாடுகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது. அந்த லாரியை ஓசூர் அருகே 13 மாடுகளுடன் போலீசார் மீட்டனர்.
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 27 மாடுகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது. அந்த லாரியை ஓசூர் அருகே 13 மாடுகளுடன் போலீசார் மீட்டனர்.
எருமைகளுடன் சென்ற லாரி
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து 27 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று கேரளா மாநிலம் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சையத்பாஷா (வயது 50) என்பவர் ஓட்டிச்சென்றார்.
லாரியில் உதவியாளர்களாக ஐதர் அலி (25), முகமது ரபீக் (27), சுதாகர் (26) ஆகிய 3 பேர் இருந்தனர். அந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவர் சையத் பாஷா ஆசுவாசப்படுத்துவதற்காக லாரியைநிறுத்தினார். அவருடன் உதவியாளர்களும் கீழே இறங்கினார்கள்.
கடத்தி சென்றனர்
அப்போது ஒரு காரில் 3 பேர் வந்தனர். அவர்கள் அங்கு லாரியில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்த 4 பேரையும் கத்தியை காட்டி மிரட்டி தாங்கள் ஓட்டி வந்த காரில் ஏற்றினார்கள். பின்னர் காரில் வந்த 3 பேரில், ஒருவர் இறங்கி கொள்ள மற்ற 2 பேரும் காரை கிருஷ்ணகிரி-சேலம் சாலையை நோக்கி ஓட்டிச்சென்றனர்.
அதே நேரத்தில் காரில் இருந்து இறங்கிய மற்றொரு நபர் லாரியை எடுத்து கொண்டு பெங்களூரு சாலையில் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் சையத் பாஷா உள்ளிட்ட 4 பேரையும் காரில் வந்தவர்கள், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரிக்கரை அருகே இறக்கி விட்டு சென்றனர். மேலும் தங்களை கடத்தல் கும்பல் ஒரு இடத்தில் இறக்கி விட்டதை கண்டு சையத்பாஷா உள்ளிட்ட 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் அவர்களுக்கு எருமை மாடுகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரியவந்தது.
லாரியில் இருந்த ஜி.பி.எஸ். கருவி
இது குறித்து சையத்பாஷா உடனடியாக ஆந்திராவில் உள்ள தனது லாரியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். எங்கே லாரி சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதை கொண்டு அந்த லாரி எங்கே இருக்கிறது என்பதை லாரியின் உரிமையாளர் பார்த்தார்.
அப்போது அந்த லாரி ஓசூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லாரி டிரைவர் கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயவாணி மற்றும் போலீசார் அத்திப்பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
கர்நாடகாவில் மீட்பு
கடத்தப்பட்ட லாரி அந்த பகுதியில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் இருந்த 27 மாடுகளில், 14 மாடுகள் திருடப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியையும், 13 மாடுகளையும் போலீசார் மீட்டனர். மேலும் 14 மாடுகளை திருடிச்சென்ற நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story