நெல்லிக்குப்பம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


நெல்லிக்குப்பம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:16 PM IST (Updated: 6 Jan 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்கப்பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது சாலையோரம் இருந்த வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யும்  பணியும், சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பகுதி சாலையோரத்தில் ஒருசில இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.

தடுத்து நிறுத்தம் 

இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் ஏற்கனவே கால்வாய் அமைக்க பள்ளம் தோட்டப்பட்ட இடத்தை விட்டு விட்டு, சற்று தள்ளி புதிதாக கால்வாய் அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதோடு, ஊழியர்களிடம் ஏற்கனவே வெட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்கு நேராக பள்ளம் தோண்டி, அந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறினர்‌ இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், ஏற்கனவே பள்ளம் தோண்டிய இடத்திலேயே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story