கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் தர விவசாயிகள் மறுப்பு
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
திருப்புவனம்,
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
கூட்டம்
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க விவசாயிகளின் நிலங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவது தொடர்பான கூட்டம் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமை தாங்கினார். தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், தொல்லியல்துறை அலுவலர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிக்கு இடம் கொடுத்த விவசாயிகள் 17 பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் நிலங்களை கிரையம் கொடுக்க முடியாது எனக்கூறி அனைவரும் கூட்டம் முடியும் முன்பே வெளியேறிவிட்டனர். அலுவலகத்திற்கு வெளியே வந்து நிருபர்களிடம் விவசாயிகள் பேட்டி அளித்தனர். அப்போது கதிரேசன் மனைவி நீதி கூறியதாவது;-
வாழ்வாதாரம்
எங்களது சொந்த நிலங்களை எங்கள் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகள் அளந்துள்ளனர். அதிகாரிகள் ஒரு முடிவு எடுத்துவிட்டு பெயரளவில் எங்களிடம் கூட்டம் என வரச்சொல்லியுள்ளனர். அகழ்வாராய்ச்சி நடைபெற்ற நிலங்களை கிரையம் செய்து கொடுக்க யாருக்கும் விருப்பமில்லை. கொடுக்கவும் முடியாது. எங்கள் வாழ்வாதாரமே தென்னங்கன்றுகள் தான். அங்கு உள்ள தென்னை மரங்கள் நாட்டு வகை மரங்கள். இவை 90 வருடங்கள் பலன் கொடுக்கும். பம்புசெட் வசதி இல்லாத காலத்திலேயே ஒவ்வொரு குடமாக தண்ணீர் சுமந்து வந்து தென்னைக்கு ஊற்றி காப்பாற்றி வளர்த்து உள்ளோம். கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை பார்க்க வந்த முதல்-அமைச்சரை பார்த்து எங்கள் விவரங்களை சொல்ல அனுமதி கேட்டோம். எங்களை பார்க்க விடாமல் அனுமதி மறுத்துவிட்டனர் என்றார்.
வினோத்குமார் மனைவி முத்துலாவண்யா கூறியதாவது:-
எனது கணவர் இறந்து 10 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் நிலங்களை எங்களுக்கு தெரியாமலேயே அதிகாரிகள் அளந்துள்ளனர். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் தென்னை மரங்கள் வளர்த்து வருகிறோம். இப்பொழுது தான் பலன் தர ஆரம்பித்துள்ளது. இன்னும் 80 வருடம் பலன் தரும். அனைத்து தென்னை மரக்கன்றுகளும் நல்ல நாட்டு வகைகளாகும். இதை அரசு எடுத்தால் எங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்றார்.
நிலங்களை கிரையம் எடுக்கும் பேச்சு வந்தால் 8-ம் கட்ட அகழாய்விற்கு கண்டிப்பாக இடம் தரமாட்டோம் என விவசாயிகள் கூறிச் சென்றனர். பின்பு இதுகுறித்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரிடம் கேட்டபோது தற்போது முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு விவசாயிகள் கூறிய விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story