குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரபாபுநாயுடுவிடம் கோரிக்கை மனு


குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரபாபுநாயுடுவிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 6 Jan 2022 11:39 PM IST (Updated: 6 Jan 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி, சந்திரபாபுநாயுடுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

வாணியம்பாடி

குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி, சந்திரபாபுநாயுடுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

சந்திரபாபுநாயுடுவுக்கு வரவேற்பு

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு தனது தொகுதியான குப்பத்தில் நேற்றும், இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்காக, விமானத்தில் வந்த அவர் பெங்களூருவில் இறங்கி, அங்கிருந்து சாலை வழியாக ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக வாணியம்பாடிக்கு வந்தார். வாணியம்பாடியில் அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்கம், பாலாறு பாதுகாப்பு சங்கம், ஆசிரியர் சங்கத்தினர் சந்திரபாபுநாயுடுவிடம் மனு கொடுத்தனர். விவசாய சங்கம், பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிடப்பில் போடப்பட்ட விமான நிலைய பணி

தாங்கள் முதல்-மந்திரியாக இருந்தபோது கிருஷ்ணாநதியில் இருந்து 3 டி.எம்.சி. நீரை கொண்டு வந்து குப்பம் தொகுதியில் அந்திரி நிவா திட்டத்தின் கீழ் வெட்டப்பட்ட கால்வாயில் நீரை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் 2 டி.எம்.சி. நீரை பாலாற்றில் விட வேண்டும். தமிழக விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. 

வாணியம்பாடியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்பம் தொகுதியில் விஜிலாபுரம் என்ற இடத்தை தேர்வு செய்து சர்வதேச விமான நிலையம் அமைக்க ரூ.98 கோடி நிதி ஒதுக்கி, 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தற்போது பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மக்களுக்கும், வெளிநாடு பயணத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த்துறை தொடர்ந்து செயல்பட..

ஆசிரியர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழில் படிக்கும் மாணவர்ளுக்கு கல்வி உதவித் தொகையை அதிகரித்துத் தர வேண்டும். தமிழ்த்துறையில் அலுவலர்கள், பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் திராவிட பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர். 

மனுக்களை பெற்றுக்கொண்ட சந்திரபாபுநாயுடு நடவடிக்கை எடுக்கப்பதாக, கூறினார். 

வாணியம்பாடியில் சந்திரபாபுநாயுடுவுக்கு அளிக்கப்பட்ட வரவற்பு நிகழ்ச்சியில் நனியாலா பகுதியைச் சேர்ந்த மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ்நாயுடு, விஜிலாபுரம் குமார், துணைத்தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாணியம்பாடி வழியாக வந்த சந்திரபாபுநாயுடுவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

Next Story