வேலூர் நேதாஜி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை. வியாபாரிகள் எதிர்ப்பு
கொரோனா பரவல் காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேலூர்
கொரோனா பரவல் காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேதாஜி மார்க்கெட்டை மாற்ற முடிவு
வேலூரில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் லாங்கு பஜார் பழக் கடைகள் உள்ள இடங்களில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்தார். மேலும் புதிய மீன்மார்க்கெட் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டது. அந்த இடத்தையும் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் வசந்தி, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வியாபாரிகள் எதிர்ப்பு
இதனை தொடர்ந்து மார்க்கெட் கடைகள் இடமாற்றம் தொடர்பாக அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு கடைகளில் மாற்றம் செய்த போது வியாபாரம் சரியான அளவில் இல்லை. மேலும் பல இன்னல்களை சந்தித்தோம். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டாம். கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்கள் முககவசம் அணியவில்லை என்றால் கடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கின்றனர். இனி அவ்வாறு செய்யக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கே அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அச்சம் வரும் என அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றனர்.
Related Tags :
Next Story