நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
x

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கரூர், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளுக்கான கணினி முறை குலுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தலைமையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு கருவி மற்றும் ஒரு கட்டுப்பாட்டு கருவி என்ற விகிதத்தில், முதலாவது கணினி முறை குலுக்கல் நடைபெற்றுள்ளது.
கரூர் மாநகராட்சி
ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவைப்படும் கருவிகளின் எண்ணிக்கையினை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனடிப்படையில், கரூர் மாநகராட்சியில் உள்ள 191 வாக்குச்சாவடிகளுக்கு 191 வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கூடுதலாக 40 கருவிகளும் என மொத்தம் 231 வாக்குப்பதிவு கருவிகளும், அதேபோல 231 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
குளித்தலை நகராட்சிக்கு 24 வாக்குச்சாவடி மையங்களுக்கு 24 வாக்குப்பதிவு கருவிகளுடன், கூடுதலாக 5 கருவிகள் என மொத்தம் 29 வாக்குப்பதிவு கருவிகளும், அதேபோல 29 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.
பள்ளப்பட்டி, புகளூர் நகராட்சி
பள்ளப்பட்டி நகராட்சிக்கு 35 வாக்குச்சாவடி மையங்களுக்கு 35 வாக்குப்பதிவு கருவிகளுடன் கூடுதலாக 7 கருவிகள் என மொத்தம் 42 வாக்குப்பதிவு கருவிகளும், அதேபோல் 42 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.
புகளூர் நகராட்சிக்கு 32 வாக்குச்சாவடி மையங்களுக்கு 32 வாக்குப்பதிவு கருவிகளுடன் கூடுதலாக 7 கருவிகள் என மொத்தம் 39 வாக்குப்பதிவு கருவிகளும், அதேபோல் 39 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் 8 பேரூராட்சிகளுக்கும் மொத்தம் 491 வாக்குப்பதிவு கருவிகளும், 491 கட்டுப்பாட்டு கருவிகளும் ஒதுக்கப்படுகிறது.
கணினி முறை குலுக்கல்
கணினி முறை குலுக்கலின் அடிப்படையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மொத்தம் எத்தனை வாக்குப்பதிவு எந்திரங்கள், எந்தெந்த பெட்டிகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும். அவை எந்தெந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் எந்திரங்களை எந்தெந்த பெட்டிகளில் வைக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விவரங்களும் கணினியால் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லீலாகுமார் மற்றும் அனைத்து நகராட்சிகளின் ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story