நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; போலீசார் தீவிர கண்காணிப்பு


நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 1:34 AM IST (Updated: 7 Jan 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. போலீசார் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. போலீசார் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மீண்டும் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதவிர 6-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
நெல்லை, தென்காசியில் அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு விரைந்து சென்று கொண்டிருந்தனர். சிலர் பெட்ரோல் பங்க்குகளில் தங்களது மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்புவதற்காக குவிந்தனர். இதனால் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பரபரப்பாக காணப்பட்டது.

போலீஸ் கண்காணிப்பு
இதையொட்டி நெல்லை மாநகரில் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்றுகொண்டு இரவு நேர முழு ஊரடங்கு பற்றி எடுத்துக்கூறி கடைகளை அடைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். மேலும் இரவு 10 மணிக்கு மேல் நடமாடிய மற்றும் வாகனங்களில் வந்த மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாநகர எல்லை பகுதியில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் அத்தியாவசிய பணிகளுக்கு வந்த வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும் மாநகரின் உள்பகுதியிலும் 18 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணி விடிய விடிய தீவிரமாக நடைபெற்றது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவுப்படி, துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இரவு நேர ஊரடங்கை கண்காணித்தனர். இதேபோல் நெல்லை புறநகர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் இரவு நேர ஊரடங்கை கண்காணித்தனர்.

Next Story