2 வீடுகளில் 59 பவுன் நகை திருட்டு
ஓமலூர் அருகே 2 வீடுகளில் 59 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் ஓமலூர் நீதிபதி வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே 2 வீடுகளில் 59 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் ஓமலூர் நீதிபதி வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
50 பவுன் நகை திருட்டு
ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 71). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி மேரி கிளாரா (62). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு அலெக்ஸ், ரெக்ஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் அலெக்ஸ் ரஷ்யாவில் டாக்டராகவும், ரெக்ஸ் கோவையில் டாக்டராகவும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 3-ந் தேதி ஆரோக்கியசாமியும், மேரி கிளாராவும் கோவைக்கு சென்று உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
நகை பறிப்பு
ஓமலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே வசித்து வருபவர் அர்ஜூனன். இவருடைய மனைவி லீலா (32). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் லீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அப்போது லீலா திடுக்கிட்டே எழுந்து சத்தம் போடவே மர்ம நபர்கள் தாலி சங்கிலியுடன் தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், துணை சூப்பிரண்டு சங்கீதா மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நீதிபதி வீட்டில் திருட முயற்சி
ஓமலூர் சார்பு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சுவேத ரன்யன். இவர் ஓமலூர் பிருந்தாவன் நகர் பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு நீதிபதிவீட்டில் இருந்தவர்கள் மின் விளக்கை போடவே மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர்.
மேச்சேரி பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். சிலம்பரசன் சத்தம் போடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்காணிப்பு கேமரா
மேலும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஓமலூர் பகுதியில் ஒரே இரவில் 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் மற்றும் நீதிபதி வீடு உள்ளிட்ட 2 வீடுகளில் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story