மூக்கனேரியில் பிணமாக மிதந்த இளம்பெண்
சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியில் இளம்பெண் பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி:-
சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியில் இளம்பெண் பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூக்கனேரி
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் மூக்கனேரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்்கிறது. இந்த ஏரியை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுதவிர மூக்கனேரி கரையோரத்தில் காலை, மாலை வேளையில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மூக்கனேரியில் 2 கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி ஒரு இளம்பெண்ணின் பிணம் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடைபயிற்சிக்கு சென்றவர்கள் சிலர், இதுகுறித்து உடனடியாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், அருணாசலம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பெண்ணின் உடல் மீட்பு
இதையடுத்து மூக்கனேரியில் மீன் பிடிப்பவர்களின் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் ஏரிக்குள் நீந்தி சென்று பெண்ணின் உடலை மீட்க முயற்சி செய்தனர். அப்போது பிணமாக மிதந்த பெண்ணின் இடது கையில் துப்பட்டாவின் ஒரு பகுதி கட்டப்பட்டும், மறுபகுதியில் சுமார் 10 கிலோ எடையிலான கல்லும் கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரம் போராடி பெண்ணின் உடல் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து துப்பட்டாவில் கல்லை கட்டி தண்ணீரில் மூழ்கடித்தார்களா? அல்லது அந்த பெண், துப்பட்டாவில் கல்லை கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அடையாளம் தெரிந்தது
அதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஏரியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே போலீசாரின் விசாரணையில் மூக்கனேரியில் பிணமாக மிதந்தது சேலம் கன்னங்குறிச்சி சத்தியா நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி கவுசல்யா (வயது 28) என்பது தெரியவந்தது. போலீசாரின் மேல் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பிரிந்து வாழ்ந்தார்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவீந்திரனுக்கும், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யா தனது பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். மேலும் அவர் வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகள் மாயமானது குறித்து கவுசல்யாவின் பெற்றோர் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கவுசல்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் மூக்கனேரியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் என்றனர். மேலும் கவுசல்யா சாவு குறித்து கன்னங்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கவுசல்யா பின்னர் வீடு திரும்பவில்லை. ஆனால் அன்றைய தினம் இரவு அவர் தனது தாயின் செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்பிற்கு உருக்கமாக பேசிய வாய்ஸ் மெசேஜ் ஒன்று அனுப்பி உள்ளார்.
அதில் கவுசல்யா பேசும் போது, அம்மா என்னை மன்னித்து விடு, எனக்கு உடலில் பல பிரச்சினை உள்ளது. அதை உங்களிடம் சொல்ல முடியவில்லை. நான் உங்களுக்கு தொந்தரவாகவும் இருக்க முடியாது. என்னால் நீங்கள் கஷ்டப்பட்டது போதும், இனிமேல் கஷ்டப்பட வேண்டாம். அதனால் தான் இந்த முடிவை எடுக்கிறேன். வேறு யாரும் இதற்கு காரணம் இல்லை. என்னை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம், சந்தோஷமாக இருங்கள். அப்பாவை நன்றாக பார்த்து கொள். எனக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேசி உள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story