ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; போலீசார் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இரவு நேர ஊரடங்கு
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கு மேல் சாலைகள் வெறிச்சோடின. இரவில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டதால் ரோடுகள் மற்றும் தெருக்களில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
அபராதம்
நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் ரோட்டில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 10 மணிக்குள் வீடுகளுக்கு சென்றுவிட வேண்டும் என்ற அவசரத்தில் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக சென்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, சுவஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இரவு 10 மணிக்கு மேல் வந்த வாகன ஓட்டிகளை எச்சரித்ததோடு, அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய தேவை இல்லாமல் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் வரக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்தனர்.
வ.உ.சி. பூங்கா மூடல்
இரவு நேர ஊரடங்காக இருந்தாலும் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
மேலும் பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் நேற்று இரவு வழக்கம்போல் ஓடின. இதேபோல் பெட்ரோல், டீசல் ‘பங்க்’குகள் செயல்பட்டன. பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ஈரோடு வ.உ.சி. பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா நேற்று அடைக்கப்பட்டு இருந்தது. பூங்காக்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story