சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதியது; ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் சாவு


சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதியது; ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 7 Jan 2022 3:33 AM IST (Updated: 7 Jan 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே, சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதியதில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

பல்லாரி:

3 பேர் சாவு

  பல்லாரி மாவட்டம் குருகோடு டவுன் அருகே பாதனஹட்டி-சித்தம்மனஹள்ளி மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதே சாலையில் ஒரு டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டா் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வாலிபர்களும் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.

வேலைக்கு சென்று விட்டு...

  தகவல் அறிந்ததும் குருகோடு போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது உயிரிழந்த 3 பேரும் பாதனஹட்டி கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது 30). இவரது நண்பர்கள் தொட்டபசப்பா (28), கரிபசப்பா (22) என்று தெரிந்தது.

  இவர்கள் 3 பேரும் சித்தம்மனஹள்ளி கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் பாதனஹட்டி கிராமத்திற்கு திரும்பிய போது டிராக்டர் மீது மோதியதால் 3 பேரும் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து குருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story