தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிங்கிலிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் அபாயகரமான வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. எனவே அங்கு தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்று சரத்குமார் என்பவர் தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு பிரசுரமானது. இந்த புகாருக்கு உடனடி தீர்வாக அங்கு தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
வீணாகும் தண்ணீர்
நெல்லை கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நல்லி உடைந்துள்ளது. இதனால் தொட்டியில் தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக செல்கிறது. எனவே, அங்கு புதிய நல்லி அமைக்க வேண்டுகிறேன்.
வசந்தராஜா, கொக்கிரகுளம்.
தெருநாய்கள் தொல்லை
ஏர்வாடி நம்பியாற்று பாலம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மீரான், ஏர்வாடி.
பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?
திசையன்விளை அருகே நவ்வலடியை அடுத்த காரிகோயில் விலக்கில் இருந்த பயணிகள் நிழற்கூடத்தை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றினர். பின்னர் அங்கு நிழற்கூடம் கட்டாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்ட வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்
குடிநீர் உறிஞ்சும் மோட்டார்கள்
தென்காசி அருகே மேலகரம் குடியிருப்பு ராயர்தோப்பு பகுதியில் பெரும்பாலான வீட்டு குடிநீர் இணைப்புகளில் முறைகேடாக மோட்டார் வைத்து உறிஞ்சுவதால், மற்ற வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கப்பெறவில்லை. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரசூல், மேலகரம்.
ஆபத்தான மின்கம்பம்
கரிவலம்வந்தநல்லூர் 5-வது வார்டு புது மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து பெயர்ந்து ஓட்டை விழுந்த நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
காளிராஜ், கரிவலம்வந்தநல்லூர்.
ஒளிராத தெருவிளக்குகள்
பாவூர்சத்திரம் அருகே குலசேகரபட்டி பஞ்சாயத்து சமுத்திரபுரம் தெருவில் பல ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே, அங்கு தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
யோகதாரணி, குறும்பலாபேரி.
பயணிகள் நிழற்கூடம் தேவை
புளியரை அருகே தாட்கோ நகரில் இருந்த பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்ததால், அதனை அகற்றினர். பின்னர் அங்கு புதிய நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டுகிறேன்.
மாதவன், தாட்கோ நகர்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
சிவகிரி 11-வது வார்டு அண்ணா வாழையடி தெருவில் வாறுகால் அமைக்கப்படாததால் கழிவுநீர் தெருவிலேயே தேங்குகிறது. எனவே, அங்கு வாறுகால், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
குட்டித்துரை, சிவகிரி.
கோவிலின் மீது வளர்ந்த செடிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலின் முன்பாக பழமைவாய்ந்த ஆண்டாள் நாச்சியார் கோவில் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. கோவிலின் மேற்கூரையில் புதர் செடிகள், மரங்கள் வளர்ந்ததால் வலுவிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகிறது. எனவே, கோவிலில் திருப்பணிகள் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.
பூங்கா அமைக்கப்படுமா?
திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் பின்புறம் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அந்த இடத்தில் சுற்றித்திரிய வாய்ப்பு உள்ளது. எனவே, அங்கு முட்செடிகளை அகற்றி விட்டு, பூங்கா அமைக்க வேண்டும்.
கணேசன், திருச்செந்தூர்.
சாலையில் ராட்சத பள்ளம்
தூத்துக்குடி மாநகராட்சி 3-வது மைல் காமராஜ் நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையும் சேதமடைந்து ராட்சத பள்ளமாக உள்ளது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மருதப்பெருமாள், தூத்துக்குடி.
Related Tags :
Next Story