சிறுபான்மையின மாணவ மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையின மாணவ மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ- மாணவிகளிடம் இருந்து 2021-2022-ம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளிமேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ்(புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ-மாணவிகளிடம் இருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்கவேண்டும்.
விண்ணப்பம் சரிபார்ப்பு
தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் விண்ணப்பத்தை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பள்ளி படிப்பு உதவித்தொகை வேண்டி வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களை வருகிற 15-ந் தேதிக்குள் பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் குறித்த காலத்துக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story