வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை பழனிக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடிவாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு


வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை  பழனிக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம்  அடிவாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
x
தினத்தந்தி 7 Jan 2022 9:35 PM IST (Updated: 7 Jan 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அடிவார பகுதியில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு சென்றனர்.


பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, உண்டியல் காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதில் வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை ஆகியவை விதிக்கப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்
இந்த தரிசன தடை எதிரொலியாக நேற்று பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வெளியூரில் இருந்து அதிகாலையிலேயே பழனிக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவுவாயில் பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் பழனிக்கு வந்து அறை எடுத்து தங்கியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். எனவே அவர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.
இதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பழனி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை செய்ய முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் தொழுகை செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அறிவுறுத்தினர்.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பழனியில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரம் கிரிவீதியை சுற்றி வந்து பின்னர் மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆனால் நேற்று தரிசன தடையால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த பக்தர்கள் பழனி பாதவிநாயகர் கோவில் முன்பகுதியில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரும்பாலான பக்தர்கள் அடிவாரத்தில் நின்று பழனி மலையை பார்த்தபடி வழிபட்டு சென்றனர்.

Next Story