ஊரடங்கால் வழிபாட்டுக்கு தடை விதிப்பு பூட்டிய கோவில்களின் முன்பு சாமி கும்பிட்ட மக்கள்
ஊரடங்கு காரணமாக வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் பூட்டி கிடக்கும் கோவில்களின் முன்பு மக்கள் சாமி கும்பிட்டனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலை பரவ தொடங்கி விட்டது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ழுழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவிலுக்குள் வந்து விடாமல் இருக்க நுழைவுவாயில்கள் பூட்டப்பட்டன.
கோவில் முன்பு வழிபாடு
நேற்றைய தினம் மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். இதனால் பக்தர்கள் விரதம் இருந்து விரும்பிய கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, கோவில்கள் பூட்டப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் மக்கள் வழக்கம் போல் விரதம் இருந்து கோவில்களுக்கு வந்தனர். பின்னர் கோவில்களின் முன்பு நின்று மனமுருகி சாமி கும்பிட்டனர்.
அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாசபெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் மக்கள் காலையிலேயே வந்து வழிபட்டனர். கோவில்கள் முன்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
இதற்கிடையே பெரிய கோவில்களுக்குள் உள்ளே செல்ல முடியாததால், சிறிய கோவில்களில் மக்கள் குவிந்தனர். இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் நேற்று பெரும்பாலான சிறிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story