அதிகரிக்கும் கொரோனா தொற்று: அரசு மருத்துவமனைகளில் 1400 படுக்கை வசதிகள் தயார் மேலும் 7 மையங்கள் தயார் நிலையில் உள்ளது


அதிகரிக்கும் கொரோனா தொற்று: அரசு மருத்துவமனைகளில் 1400 படுக்கை வசதிகள் தயார் மேலும் 7 மையங்கள் தயார் நிலையில் உள்ளது
x
தினத்தந்தி 7 Jan 2022 10:07 PM IST (Updated: 7 Jan 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் சிகிச்சை அளிக்க 7 மையங்கள், அரசு மருத்துவமனைகளில் 1400 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.


விழுப்புரம், 

விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் விடுதியில் 246 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் விடுதியில் 246 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. 

இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக பயன்படுத்திடும் வகையில் போர்வை, வாளி, சோப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், அனைத்து பகுதிகளையும் சுகாதாரமான முறையில் பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2,800 படுக்கை தயார்

மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 1,400 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 50 சதவீத படுக்கை வசதிகள் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடியதாகும்.


மேலும் மாவட்டத்தில் 7 கொரோனா சிகிச்சை மையங்களில் 1,400 படுக்கை வசதிகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,400 படுக்கை வசதிகளும் என மொத்தம் 2,800 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான போதுமான அளவிற்கு ஆக்சிஜன் வசதி அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று குறித்த தகவல் அறிந்திடும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

இக்கட்டுப்பாட்டு அறையின் மூலம்  தொற்று பாதித்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிசிச்சை முறைகள், நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களின் விவரங்கள் குறித்து சேகரிக்கும் பணி நடைபெறும்.

நோய் தடுப்பு பணிகள்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வட்டார அளவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தி நோய் தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story