வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கோவில்கள் வெறிச்சோடியது பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்
வழிபாட்டு தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கோவில்கள் வெறிச்சோடியது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் செல்ல தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறிய மற்றும் பெரிய கோவில்கள் என மொத்தம் 1,500 கோவில்களிலும் நேற்று பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படாததால் அந்த கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்
மாறாக அந்தந்த கோவில் அர்ச்சகர்கள் மட்டும் வழக்கம்போல் கோவிலை திறந்து ஆகம விதிமுறைப்படி சாமிக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். ஆனால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கோவிலுக்குள் செல்ல முடியாத அவர்கள், கோவிலின் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது.
Related Tags :
Next Story