தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 7 Jan 2022 10:22 PM IST (Updated: 7 Jan 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு மகன் ஏமாற்றியதால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி:
கடமலைக்குண்டு அருகே உள்ள தொப்பையாபுரத்தை சேர்ந்த தங்கம் மனைவி செல்லமாயி (வயது 80). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது அவர் கையில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டி கொண்டு வந்தார். பாட்டிலை திறக்க முயன்ற போது அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். 
அவரிடம் இருந்து மண்எண்ணெய், தீப்பெட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது திடீரென்று செல்லமாயி மயங்கி விழுந்தார். அவரை போலீசார் கைத் தாங்கலாக அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
பின்னர் மயக்கம் தெளிந்த அவர் போலீசாரிடம் கூறுகையில், "எனது மகன் எனது சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் என்னை பராமரிக்காமல் வீட்டில் இருந்து துரத்தி விட்டார். அதனால் விரக்தியில் தீக்குளிக்க வந்தேன்" என்று கண்ணீர் மல்க கூறினார். 
பின்னர் அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மேலும் விசாரணை நடத்தி அவருக்கு அறிவுரைகள் கூறி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மகன் சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு ஏமாற்றியதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story