வருகிற 23-ந் தேதி நடக்கும் முகாமில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்


வருகிற 23-ந் தேதி நடக்கும் முகாமில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்
x
தினத்தந்தி 7 Jan 2022 11:01 PM IST (Updated: 7 Jan 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதி நடக்கும் முகாமில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பொருட்டு வருகிற 23-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

சிறப்பு மையங்கள்

மேலும் அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லை பகுதிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,611 மையங்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 45 ஆயிரத்து 681 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளில் சுகாதாரத்துறையுடன் இணைந்து பள்ளி கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய் துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று செயல்பட உள்ளன.

வீடு வீடாக...

முகாம் ஒன்றுக்கு நான்கு நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சேர்ந்த 6,444 பணியாளர்களும், 196 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 7 சிறப்பு குழுக்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்து வரும் இரண்டு நாட்களில், இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
மேலும் பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே பெற்றோர் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுங்கள். இவ்வாறு அவர் கூறினார்..
கூட்டத்தில் கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சாய்ரா பானு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு மற்றும் டாக்டர்கள், பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story