பக்தர்களுக்குதடை எதிரொலி: அனைத்து வழிபாட்டு தலங்களும் வெறிச்சோடின


பக்தர்களுக்குதடை எதிரொலி: அனைத்து வழிபாட்டு தலங்களும் வெறிச்சோடின
x
தினத்தந்தி 7 Jan 2022 11:10 PM IST (Updated: 7 Jan 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்களுக்கு 3 நாள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடின.

கடலூர், 

வைரஸ் பரவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொருபுறம் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

1,640 கோவில்கள்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில்,  கடலூர் பாடலீஸ்வரர் கோவில், வரதராஜபெருமாள் கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில், கீழத்தெரு மாரியம்மன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில், பண்ருட்டி திருவதிகை சரநாராயபெருமாள், வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட 1,640 கோவில்களிலும் பக்தா்கள் தாிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பக்தா்கள் இன்றி வழக்கம் போல் கோவிலுக்குள் பூஜைகள் நடந்தது. இதனால் பெரும்பாலான கோவில்கள் பக்தா்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நான்கு சன்னதி வாயில்களும் நேற்று மூடப்பட்டதுடன், பக்தர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனுமதி கிடையாது என்று கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், கோவிலில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் பலர், நான்கு சன்னதி வீதியிலும் வலம் வந்து சன்னதி அருகே விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டு சென்றனர். இதற்கிடையே கோவில்களில் தாிசனத்துக்கு அனுமதி கிடையாது என்பது பற்றி அறியாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலையில் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு படையெடுத்து சென்றனர். ஆனால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு, கோவிலுக்குள்ளே பூஜை நடந்ததால் பக்தர்கள், ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சிலர் கோவில் முன்பு நின்றபடி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

தொழுகை

இதேபோல் பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் மதியம் தொழுகை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் கடலூரில் உள்ள கார்மேல் அன்னை ஆலயம், தூயஎபிபெனி ஆயலம், ஏ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story