கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்தது: நாமக்கல்லில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு கோவில் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்

கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்தது: நாமக்கல்லில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு கோவில் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்
x
தினத்தந்தி 7 Jan 2022 11:38 PM IST (Updated: 7 Jan 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நாமக்கல்லில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.

நாமக்கல்:
கொரோனா விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நாமக்கல்லில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
வழிபாட்டு தலங்கள் மூடல்
கொரோனா நோய் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் இரவு நேர ஊரடங்கு, பொது போக்குவரத்து மற்றும் ஓட்டல்களில் கட்டுப்பாடு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. 
மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் சாமி கோவில், பாலதண்டாயுத பாணி சாமி கோவில் மற்றும் பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டன. 
ஆஞ்சநேயர் கோவில்
இதனால் கோவில் வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கோவில்கள் சாத்தப்பட்டதால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூட்டப்பட்டு இருந்த இரும்பு கேட்டின் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற கோவில்களிலும் அரசு விதிப்படி நடை சாத்தப்பட்டன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.

Next Story