காதல் ஜோடி தற்கொலை


காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2022 11:38 PM IST (Updated: 7 Jan 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

உறவினர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருமணமான 1½ மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீரபாண்டி
உறவினர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில்  திருமணமான 1½ மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் ஜோடி
திருப்பூர் வீரபாண்டி மீனாம்பாறை பாலக்கரை தோட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் சரண் (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் டி-பார்ம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். இவருடைய தூரத்து உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த வீரமுத்து. இவருடைய மகள்  வினிதா (18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். திருப்பதி குடும்பத்தினரும், வீரமுத்துவின் குடும்பத்தினரும் உறவினர்கள் என்பதால் கந்தர்வக்கோட்டையில் நடைபெறும் விசேஷங்களில் கலந்து கொள்ள அவ்வப்போது திருப்பதி தனது குடும்பத்துடன் சென்று வந்தார். இதனால்  சரணுக்கும், வினிதாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. 
திருமணம்
இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கந்தவர்வக்கோட்டைக்கு சென்ற சரண், பெற்றோருக்கு தெரியாமல் வினிதாவை அழைத்துக்கொண்டு அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் திருப்பூர் வந்து காங்கேயம் சாலையில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையில் வினிதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், சரணுடன் வினிதா திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் தனியாக வசித்து வந்த சரணையும், வினிதாவையும் சரணின் பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதனிடையே நேற்று காலை சரணின் தாயார் மற்றும்அக்காள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் சரணும், அவருடைய காதல் மனைவி வினிதாவும்   வீட்டில் இருந்தனர். நேற்று இரவு வேலை முடிந்து சரணின் தாயார் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை.
தற்கொலை
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு  சரண் மற்றும் வினிதா ஆகிய 2 பேரும் தனித்தனியாக தூங்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் விரைந்து சென்று அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். 
விசாரணையில், பிரித்து விடுவார்களோ என்று பயந்த புதுமண காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.  திருமணம் செய்து கொண்ட 1½ மாதத்தில் காதல் ஜோடிதற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story