குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள்


குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள்
x
தினத்தந்தி 7 Jan 2022 11:48 PM IST (Updated: 7 Jan 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலம் அருகே உச்சுவாடியில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்;
வடபாதிமங்கலம் அருகே உச்சுவாடியில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பிள்ளையார் குளம் 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலம் உச்சுவாடியில், பிள்ளையார் குளம் உள்ளது. இந்த குளத்தை வடபாதிமங்கலம், உச்சுவாடி, வடக்கு தெரு, தெற்கு தெரு, நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, கீழ உச்சுவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களாக குளம் முழுவதையும் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து குளம் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு ஆகாய தாமரை செடிகள் படர்ந்து உள்ளன. 
விரைவில் அகற்ற கோரிக்கை
 
இதனால் குளத்தை பயன்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். ஆகாய தாமரை செடிகள் நிறைந்து உள்ளதால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளதாகவும் மக்கள் கூறுகிறார்கள். 
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குளத்தை  சூழ்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story