கொரோனா பரவலை தடுக்க பாபுராவ்தெரு தகரத்தால் அடைப்பு
கொரோனா பரவலை தடுக்க பாபுராவ்தெரு தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்
கொரோனா பரவலை தடுக்க பாபுராவ்தெரு தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்தவர்களுக்கு கட்டுப்பாடு
வேலூர் மாநகர பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்தவர்கள் காந்திரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். விடுதிகளில் தங்கி உள்ள வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வேலூர் மாநகர சாலைகளிலும், கோட்டை பகுதிகளிலும் பரவலாக சுற்றித் திரிகின்றனர். தேவையில்லாமல் அவர்கள் சுற்றி திரிவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி காந்திரோடு உள்பட 8 இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த யாராவது அந்த வழியாக வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். வேலூர் கோட்டை மற்றும் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து விடுதி உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது அத்தியாவசிய பொருட்கள் தேவையெனில் விடுதி பணியாளர்கள் மூலம் வாங்கிக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகரத்தால் அடைப்பு
இந்தநிலையில், சி.எம்.சி. மருத்துவமனை எதிரில் உள்ள பாபுராவ் தெருவில் விடுதிகளில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் பலருக்கு கொரோனா வந்துள்ளது. நோயாளியுடன் வந்தவர்கள் பலர் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிவதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியில் வராதவாறு தகரத்தால் பாதையை அடைத்துள்ளனர். மேலும் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) சுக்கையாவாத்தியார் தெரு பகுதியும் தகரத்தால் அடைக்கப்பட உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தர மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story